

கைது செய்யப்பட்ட தேஜாஸ், பிரணவ், முகமது சமீர்
சென்னை: சிபிஐ மற்றும் குஜராத் போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, பெண் மருத்துவரிடம் ரூ.24 லட்சம் பறிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகாவில் பதுங்கியிருந்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த 3 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மருத்துவர் சித்ரலேகா (70). இவருக்கு கடந்த செப்.25-ம் தேதி அடையாளம் தெரியாத நபரிடமிருந்து செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.
எதிர் முனையில் பேசிய நபர், “குஜராத் மாநிலம் காந்திநகர் காவல் நிலைய அதிகாரி மதன் குமார் பேசுகிறேன். நீங்கள் தொழில் அதிபர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய நபராக உள்ளீர்கள். எனவே, உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளேன். நீங்கள் நிரபராதி என நிரூபிக்க உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நான் தரும் வங்கிக் கணக்குக்கு உடனே அனுப்புங்கள்” என மிரட்டியுள்ளார்.
இதேபோல், சிபிஐ அதிகாரி என பேசியவரும் இதையே தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய சித்ரலேகா, அவர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு ரூ.24 லட்சம் அனுப்பியுள்ளார்.
பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். சித்ர லேகா பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு எண் மற்றும் செல்போன் எண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணின் விவரங்களை சேகரித்து, விசாரணை மேற்கொண்டதில், மோசடி நபர்கள் கர்நாடக மாநிலம் மைசூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்த சென்னை தனிப்படை போலீஸார், சித்ரலேகாவிடம் பணம் பறித்த மைசூருவைச் சேர்ந்த தேஜாஸ் (20), அதே பகுதி பிரணவ் (20), முகமது சமீர் (21) ஆகிய 3 பேரை கடந்த 17-ம் தேதி கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.