

ஜோசப், தீபக் ஜான், முத்துக்குமார்
சென்னை: தொழில் அதிபரை காரில் கடத்தி கத்திமுனையில் ரூ.15 லட்சம் கேட்டு தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை நீலாங்கரை, நியூ கணேஷ் நகர் 8-வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் பச்சையப்பன் (42). சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 30-ம் தேதி மாலை திருப்போரூர் முருகன் கோயிலுக்கு காரில் சென்று, சாமி தரிசனம் செய்துவிட்டு நீலாங்கரை, ஐஸ் பேக்டரி, சிங்காரவேலன் சாலையில் உள்ள துரித உணவகத்தில் உணவு ஆர்டர் செய்துவிட்டு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் பச்சையப்பனை வலுக்கட்டாயமாக அவர்களது காரில் கடத்தி பூந்தமல்லி, அம்பாள் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.
பின்னர் அவரை சரமாரியாக தாக்கி கத்திமுனையில் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினர். அவர்களிடமிருந்து தப்பிய பச்சையப்பன் இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் கடத்தப்பட்ட பச்சையப்பனும், வெற்றி என்பவரும் நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் பச்சையப்பன் அவருக்கு சொந்தமாக வேலூரில் உள்ள நிலத்தை விற்றுத் தருமாறு வெற்றியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெற்றி வேறு ஒரு நபருக்கு விலை பேசி ரூ.1 லட்சம் அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பச்சையப்பனிடம் அதிக பணம் உள்ளதாக நினைத்த வெற்றி, அவரைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டு, கூட்டாளிகளுடன் சேர்ந்து பச்சையப்பனை காரில் கடத்தி தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
கடத்தலில் ஈடுபட்ட கூட்டாளிகளான கோட்டூர் ஜோசப் (52), பெரம்பூர் தீபக் ஜான் (43), ஜாபர்கான்பேட்டை முத்துக் குமார் (48) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதில் மூளையாகச் செயல்பட்ட வெற்றி தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். வெற்றி மீது ஏற்கெனவே 10 குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஆட்டோ, கத்தி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.