

சென்னை: சென்னையில் அடுத்தடுத்து 2 கொடூரக் கொலைகள் நடைபெற்ற நிலையில், மேலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 285 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெசன்ட் நகரில் கடந்த வாரம் சனிக்கிழமை தவெக பிரமுகர் கண்ணன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற நாட்களிலேயே இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவொற்றியூர் பகுதியில் பிரதீப் ராஜ் என்ற துணை நடிகர் கொலை செய்யப்பட்டார். இந்த 2 கொலைகளும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சென்னையில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையடுத்து, சென்னையில் மேலும் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
குறிப்பாக, முன்விரோதம் கொண்டுள்ள ரவுடிகள் மற்றும் அவர்களது கும்பல்கள், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்கள் மற்றும் காவல்துறையின் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை போலீஸார் தொடங்கினர்.
இதற்காக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்டவர்கள், சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள், தலைமறைவாக இருந்தவர்கள் உள்ளிட்டோரை போலீஸார் தீவிரமாக தேடினர்.
சென்னை முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், வடக்கு மண்டலத்தில் 108 பேர், மேற்கு மண்டலத்தில் 38 பேர், தெற்கு மண்டலத்தில் 94 பேர், கிழக்கு மண்டலத்தில் 45 பேர் என குற்றப் பின்னணி உடைய மற்றும் சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மொத்தம் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் காவல் துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.