

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீஸார் அங்கு சோதனை நடத்தி வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் ஹாலிக், அமினல் இஸ்லாம் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் வங்கதேசத்தினருக்கான அடையாள அட்டைகளும் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சுரேஷ், நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட 25 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.