

கோப்புப் படம்
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சென்னையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக பிரபலமான 350 தேவாலயங்களை சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதுமட்டும் அல்லாமல் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க சாதாரண உடை அணிந்த போலீஸார் களத்தில் இருந்தனர். மேலும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்து இருந்தனர்.
அதையும் மீறி சிலர் அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈசிஆர் உள்ளிட்ட சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் நேற்று முன்தினம் இரவு வாகனப் பந்தயங்களில் ஈடுபட்டனர்.
இவர்கள் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் துப்புத்துலக்கிய போக்குவரத்து போலீஸார் அதிவேகமாக ஓட்டப்பட்ட மற்றும் வாகன பந்தயத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 24 பைக்குகளை நேற்று பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்களை ஓட்டிய இளைஞர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.