

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே புஷ்பத்தூரில் உள்ள தனியார் காகித ஆலையில் காகிதம் அரைக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
பழநி அருகேயுள்ள புஷ்பத்தூரில், திருப்பூர் மாவட்ட எல்லையில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை பழைய காகிதங்களை அரைக்கும் இயந்திரத்தின் (பாய்லர்) உட்பகுதியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நூர் அலாம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) ஆகியோர் விஷ வாயு தாக்கியதில் மயக்கமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக, பழநி சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.