

கைதான காவல் ஆய்வாளர் புகாரி
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அகில் குமார். இவர் தங்க வியாபாரம் மற்றும் ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், காவல் ஆய்வாளர் புஹாரி என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தன்னை அழைத்து விசாரணை மேற்கொண்டதாகவும் அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மொட்டை கிருஷ்ணன் என்பவர் வழக்கில் இருப்பதாகவும் அவருடைய செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது தனது பெயரில் சிம் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் தன்னை இந்த வழக்கில் சேர்த்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும், இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் தனக்கு 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என ஆய்வாளர் புகாரி தெரிவித்த நிலையில் தான் 20 லட்சம் ரூபாயை கொடுத்ததாகவும் பின்னர் இரண்டு வருடங்களில் பல காரணங்களை கூறி தன்னிடமிருந்து 40 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஆய்வாளர் புஹாரி, தனது வீட்டிற்கு வந்து இணை ஆணையர் போதைப்பொருள் தொடர்பாக விசாரிக்கச் சொன்னதாகக் கூறி, வீடு முழுவதும் சோதனை செய்த நிலையில், சோதனையில் ஒன்றும் சிக்காததால் மீண்டும் 5 லட்சம் ரூபாய் வரை கேட்டு ஆய்வாளர் மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உடனடியாக 5 லட்சம் ரூபாய் தயார் செய்து யானை கவுனி காவல் நிலையம் அருகே கொண்டு சென்று கொடுத்ததாகவும், பின்னர் ஆய்வாளர் புஹாரி மற்றும் அவருடன் வந்த காவலர்கள் காரில் ஏறிச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல ஆய்வாளர் புஹாரி சுமார் 40 லட்சம் ரூபாய் வரை பணம் தன்னிடம் இருந்து பறித்து விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புகார் தொடர்பாக பூக்கடை துணை ஆணையர் கோபி, காவல் ஆய்வாளர் புஹாரி மற்றும் அவருடன் வந்த காவலர்களிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்ட நிலையில், குற்றத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கைதானவர்களில் ஒருவர் இன்ஸ்பெக்டர் மற்றொருவர் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து காவல் ஆய்வாளர் புகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் விசாரணையில் 40 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததும் தெரியவந்ததால் காவல் ஆய்வாளர் புகாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு காவலர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆயுதப்படை காவலர் சீனிவாசன் என்பவரையும் யானை கவுனி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.