

கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேர். (உள்படம்) கொல்லப்பட்ட ஜான்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மறியலில் ஈடுபட்ட மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கும்பல், சாலையோர டீக்கடையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டியது.
இதில், பெரும்பத்து இந்திரா காலனியைச் சேர்ந்த ஜான் (42), அப்பகுதியிலுள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிநாத் கட்டா (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, வீராங்குளம் கணேசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வெட்டிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற அந்தக் கும்பல், புளியங்குளம் அருகே சசிகுமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளது.
இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி நடந்த மறியல். | படம்: மு.லெட்சுமி அருண் |
காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இரட்டைக்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நாங்குநேரி- ஏர்வாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நெல்லை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய புறப்பட்டனர். இதனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு உருவானது.
‘ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி, மறியல் போராட்டம் மாலையிலும் தொடர்ந்ததால் பதற்றம் நிலவியது.
அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கொலையான ஜான் குடும்பத்தினருடன் விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) மகேஸ்வர் தயாள், தென் மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, திருநெல்வேலி சரக காவல்துறை தலைவர் சரவணன், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடந்தது.
குற்றவாளிகளை கைது செய்ய 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேரை பிடித்து விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
7 இளைஞர்கள் கைது
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் நேற்று மாலை 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் விவரம்: தென்னிமலை கண்ணன் (21), சுப்பையா சுபாஷ் (19), அந்தோனிமைக்கேல் (18), கல்யாணி (19), நாங்குநேரி நம்பிநகர் ராஜா (19), வள்ளியூர் உச்சிமாகாளி (20), நெடுங்குளம் வசந்தகுமார் (21). இவர்களிடம் விசாரணை நடக்கிறது.