

மணிகண்டன், ஆனந்த்
சென்னை: ராயப்பேட்டை, ரோட்டரி நகர் 15-வது தெருவைச் சேர்ந்தவர் ஜீவா (31). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 15-ம் தேதி, இவரது வீட்டருகே வசித்து வந்த பெண் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். மாலையில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதில், பங்கேற்று ஜீவா நடனமாடினார்.
மேலும், சிலரும் ஆடினர்.அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு ஜீவா அதே பகுதியில் உள்ள ஆர்.கே.சாலை, பறக்கும் ரயில் நிலைய பாலம் அருகேயுள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 பேர், சவ ஊர்வல தகராறை சுட்டிக்காட்டி கம்பியால் தாக்கி விட்டு தப்பினர்.
இதில், காயம் அடைந்த ஜீவா சிகிச்சைக்கு பின்னர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், தாக்குதல் நடத்தி விட்டு தப்பியது திருவல்லிக்கேணி, ரோட்டரி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (25), அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (30) என்பது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.