கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குவேந்தல் கிராமத்தை சேர்ந்த அமுதன்(19) என்பவர், கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி அமுதன் சக மாணவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் கொலை, கடத்தல், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸார் கூறும்போது, ‘‘கல்லூரி மாணவர் கொலை வழக்கில் இதுவரை 17 வயது சிறுவன், ஆராமுதன், அரவிந்த், சிவரோகித், மணிபாலு, சந்தோஷ், ஸ்ரீராம், ஹரிஷ் பாண்டியன், லலித் ஆதித்யா, சச்சின், பிரதீப், கவுதம், தருண்குமார், திருமூர்த்தி ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இவ்வழக்கில் 15-வது நபராக அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவரான மதுரையைச் சேர்ந்த மோனிஷ்(21) நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.