

சென்னை: மீஞ்சூர் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் 15 வயது பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம் பேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி - முனியம்மா தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சீனிவாசன் (15) என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். இதில், சீனிவாசன் திருவெள்ளவாயலில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு, மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயாராகி வந்தார்.
இந்நிலையில், நேற்று பகலில் முனுசாமி தன் மனைவி, மகளுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தும்பாக்கம் பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு சென்றார். இச்சூழலில் சீனிவாசன், நேற்று இரவு செங்கழுநீர்மேடு கிராமத்தில் நடந்த கபடி விளையாட்டு போட்டியை தன் நண்பர்களுடன் பார்த்துவிட்டு, இன்று அதிகாலை 4.30 மணியளவில் தங்களின் குடிசை வீட்டுக்கு வந்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த, எதிர் வீட்டில் வசிக்கும் சீனிவாசனின் பாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியோடு தீயை அணைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சீனிவாசன் தீயில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காட்டூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில், வீடு முழுமையாக எரிந்ததால், வீட்டில் இருந்த குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள், துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் தீக்கிரையாகின. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.