

சென்னை: நகை பட்டறையிலிருந்து 220 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற, ஊழியர் உள்பட 4 பேர் ஒடிசாவில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டனர். சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் வசிப்பவர் அரிஷ் (35). இவர், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இவரது பட்டறையில் வேலை செய்து வந்த, மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் பேரா (42) என்பவரிடம், அரிஷ் கடந்த 7-ம் தேதி தங்ககட்டிகள் மற்றும் தங்க நகைகளை கொடுத்து, அதை உருக்கி புதிய வடிவில் நகைகளாக செய்து தருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, கார்த்திக் பேரா கடந்த 10-ம் தேதி புதிதாக தயார் செய்த தங்க நகைகளை கொடுத்துள்ளார். அதில், 200 பவுன் தங்க நகைகளை திரும்ப கொடுக்காமல் திருடிவிட்டு நண்பர்களுடன் தலைமறைவானார். அதிர்ச்சி அடைந்த அரிஷ், இதுதொடர்பாக, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திக் பேரா, அவரது நண்பர்களான கூட்டாளிகள், அதே மாநிலத்தைச் சேர்ந்த பபான்ராய் (29), நாரயண்மைடி (19) மற்றும் திருட்டு நகைகளை வாங்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் சந்திரா பிரதன் (42) ஆகிய 4 பேரையும் ஒடிசாவில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர். அவர்களிடமிருந்து 258 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.