

சென்னை: கீழ்ப்பாக்கம் போலீஸார் நேற்று முன்தினம் மதியம், கீழ்ப்பாக்கம், வாசு தெருவில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார் போதைப் பொருள் வைத்திருந்த ஆவடியைச் சேர்ந்த உஸ்மான் (23), அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி பிரவீன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் மெத்தம்பெட்டமைனை பெங்களூருவிலிருந்து வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.