

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி, அவரது மனைவி ராஜலட்சுமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள பையனூரைச் சேர்ந்தவர் தனசேகர்.
இவருக்கு மயிலாப்பூர் கிழக்கு அபிராமபுரத்தில் வசிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி குடும்பத்துடன் நட்பு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி தனசேகர், தனது 2 மகள்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
அதற்கு கலாநிதி ரூ.40 லட்சம் கேட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் தனசேகர் தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பெற்றுத் தரும்படி கலாநிதியிடம் மொத்தம் ரூ.2.5 கோடி வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட கலாநிதி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
அதிர்ச்சி அடைந்த தனசேகர், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. சில நாட்களுக்கு பின்னர் பணத்துக்கு ஈடாக நிலப்பத்திரம் ஒன்றை கொடுத்தாராம். பின்னர் அந்த நிலப்பத்திரம் காணாமல் போனதாக மோசடி புகாரை கலாநிதி காவல் துறையில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனசேகர், போலீஸில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக தலைமைச் செயலகத்திலும் தனசேகர் மனு அளித்தார். ஆனால் அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து தனசேகர், உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், தனசேகர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மயிலாப்பூர் போலீஸாருக்கு அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார், கலாநிதி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி ராஜலட்சுமி மீது மோசடி, கூட்டுச் சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இருவரிடமும் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.