

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், ஆளுநர் மாளிகை, நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக டிஜிபி அலுவலகத்துக்கு மீண்டும் இ-மெயில் வந்தது. உடனே டிஜிபி அலுவலக போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர்.
காலை 10 முதல் 11 மணி வரை சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து வதந்தியைப் பரப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். முதல்வர் வீட்டுக்கு இதேபோல் முன்பும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.