

சென்னை: வேளச்சேரியைச் சேர்ந்தவர் சுரூபா ராணி சிவக்குமார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார். இவர் தனது ரூ.25 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் மற்றும் ரூ.21 லட்சம் ரொக்கத்தை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் லாக்கரில் வைத்திருத்தார்.
இதை அவர் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. லாக்கரை அணுகும் உரிமையை சென்னையில் வசிக்கும் தனது தாயிடம் ஒப்படைத்திருந்தார். இந்நிலையில், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் மாயமானது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சுரூபா ராணி, தனது சகோதரர் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.
காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் மேலாளர், லாக்கரைத் திறந்து, ரூ.21 லட்சம் மற்றும் நகைகளைத் திருடியது தெரியவந்தது. மேலும் அந்த நகையை ரூ.20.60 லட்சத்துக்கு அடகு வைத்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.