

சென்னை: கைலாய யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாக 38 பேரிடம் ரூ.12.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (54). இவருக்கு கைலாய மலைக்குச் செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை.
இது தொடர்பாக, தனக்கு அறிமுகமான திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர் கோயிலில் தூய்மைப் பணி செய்து வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வி (58) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
அவர், தனக்கு தெரிந்த அம்பத்தூரில் வசிக்கும் சுவாதீஸ்வரன் (34) கைலாய யாத்திரை அழைத்துச் செல்கிறார் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெருமாள் உள்ளிட்ட 38 பேர் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ரூ.12.7 லட்சத்தை சுவாதீஸ்வரனிடம் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் புகார்: ஆனால், உறுதியளித்தபடி கைலாயம் அழைத்துச் செல்லவில்லை. ஏமாற்றப்பட்ட 38 பேரும் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பண மோசடியில் ஈடுபட்ட சுவாதீஸ்வரன், உடந்தையாக இருந்த செல்வி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.