

சென்னை: நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரபலங்களுக்கும், தூதரகங்கள், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, உயர் நீதிமன்றம், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.
350-க்கும் மேற்பட்ட... அதுவும், டிஜிபி அலுவலக இ-மெயில் முகவரிக்கே பெரும்பாலான மிரட்டல் மின்னஞ்சல்கள் வருகின்றன. அந்த வகையில், சென்னையில் கடந்த 7 மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் நடிகர் ரஜினி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வீடுகள், 2 செய்தி நிறுவன அலுவலகம் உட்பட 15 இடங்களுக்கு மிரட்டல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “மிரட்டல் விடுப்பவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவராகவோ, பிறரின் பதற்றத்தில் இன்பம் காணும் மனநிலை உள்ளவர்களாகவோ இருக்கலாம். இருப்பினும், நாங்கள் வெடிகுண்டு மிரட்டல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தனர்.
டார்க் வெப் மிரட்டல்கள்... சைபர் க்ரைம் நிபுணர்களிடம் கேட்டபோது, “டார்க் வெப் என மிரட்டல்கள் எந்த வழியாக வந்தாலும் கண்டுபிடித்து விடலாம். இந்த வெப்சைட்டின் ஆர்ஜின் ரஷ்யாவில் உள்ளதாக கருதப்படுகிறது. அந்நாட்டுடன் மத்திய அரசு மூலம் தொடர்பு கொண்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து விடலாம். இதற்கு மெனக்கெடல் வேண்டும்” என்றனர். வெடிகுண்டு மிரட்டல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.