

சென்னை: தொழில் அதிபரிடம் ஏலச்சீட்டு மூலம் ரூ.2 கோடி மோசடி செய்த சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (63). இவர் மனைவி, தம்பியுடன் சென்னை ராயப்பேட்டையில் மருந்து மொத்த விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் பாரிமுனையில் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்த புதுச்சேரியைச் சேர்ந்த சப்பாணி பிள்ளை என்ற ரவி (57) என்பவரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடி கட்டினார். அதற்கு ரூ.2.34 கோடி கிடைக்கும் என்று ரவி கூறியதுடன், அந்த தொகைக்கான காசோலைகளையும் கொடுத்தார்.
ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஜெயச்சந்திரன், இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, அப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட ரவியை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.