

சென்னை: டிஜிபி அலுவலகம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதியைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட, கொள்ளையன் கைது செய்யப்பட்டார். பழைய வண்ணாரப்பேட்டை, நல்லப்ப வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (55). இவர் கடந்த 9-ம் தேதி மனைவி மலர்க் கொடி (53) மற்றும் மகளுடன் ராயப்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று உணவருந்தினார்.
பின்னர் மகளை அங்கேயே விட்டுவிட்டு, மனைவியுடன், பாஸ்கர் வீட்டுக்கு புறப்பட்டார். டிஜிபி அலுவலகம் அருகே காமராஜர் சாலை, ராணி மேரி கல்லூரி எதிரே பைக் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த நபர் பாஸ்கரின் மனைவி மலர்க்கொடி தோளில் மாட்டியிருந்த கைப்பையை பறித்து, இருவரையும் கீழே தள்ளிவிட்டு தப்பினார்.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைக் கண்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து மெரினா காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வழிப்பறியில் ஈடுபட்டது மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்த ராமதாஸ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமதாஸை போலீஸார் கைது செய்து, அவர் பறித்துச் சென்ற ரூ.7 ஆயிரத்துடன் கூடிய கைப்பையை மீட்டனர். ராமதாஸ் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது.