

சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.2.5 கோடி சொத்து அபகரிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கிண்டியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (65). தொழில் அதிபரான இவருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சொத்தை அடமானம் வைத்து பணம் திரட்ட அப்துல் காதர் முடிவு செய்தார்.
இதையடுத்து நண்பர் மூலம் அறிமுகமான மடிப்பாக்கத்தில் வசிக்கும் டெல்லியைச் சேர்ந்த விநாயக ஆச்சார்யா (51) என்பவரிடம் கிண்டியில் உள்ள ரூ.2.5 கோடி மதிப்புள்ள சொத்தை அடமானம் வைத்தார்.
ஆனால், விநாயகா ஆச்சார்யா இந்த சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அப்துல் காதர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த விநாயக ஆச்சார்யா, கூட்டாளியான சேலத்தைச் சேர்ந்த சுஜாதா (48) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.