

மதுரை: மதுரை, கோவை மத்திய சிறைகளில் மின் முறைகேடு தொடர்பாக சிறைத்துறை தலைவர் மற்றும் மின்வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த சேகர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மத்திய சிறைச்சாலை அருகே சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பில் முறைகேடு செய்து வருகின்றனர். மதுரை மத்திய சிறை, கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் இதுபோன்று மின் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலைகளில் உள்ள பல அதிகாரிகள் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இருந்த போதும் அதிகளவில் மின்சாதனங்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் இல்லை. குறிப்பாக மதுரை சரக கூடுதல் இயக்குநர் பழநி, கோவை சரக டிஐஜி சண்முக சுந்தரம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய உர்மிளா ஆகியோர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மத்திய சிறையில் நடைபெறும் மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் பதில் அளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.
அதற்கு முன்னதாக சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிச.3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.