

சென்னை: அஜர்பைஜான் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (30). இவர், வெளிநாட்டில் பணி செய்ய வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது, வெளிநாட்டு வேலை தொடர்பாக, சமூக வலைதளத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
போலி விசா, பணியாணை எதிர் முனையில் பேசிய நபர், தான் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த சுடலை குமார் (38) என்றும், தன்னால் அஜர்பைஜான் நாட்டில் வேலை வாங்கித் தர முடியும் எனவும் கூறி, சேவை கட்டணமாக ரூ.1.5 லட்சம் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, அந்நாட்டுக்குச் செல்ல தேவையான விசா மற்றும் வேலைக்கான ஆணைகளை கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக் கொண்டு, சென்னையிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து குருமூர்த்தி அஜர்பைஜான் செல்ல முயன்றார். அப்போது, டெல்லி விமான நிலையத்தில் குரூமூர்த்தியின் ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள் விசா மற்றும் பணிநியமன ஆணை என அனைத்தும் போலி என கண்டறிந்து அவரை திருப்பி அனுப்பினர்.
இதேபோல், சுடலை குமாரால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். மொத்தம் ரூ.6 லட்சம் கொடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 4 பேரும் சென்னை வந்து சென்னை விமான நிலையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், புகார் உண்மை என தெரிய வந்ததால், தலைமறைவாக இருந்த சுடலை குமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.