

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் கொலையான வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சித் தலைவராக இருந்தவர் சுபாஷ். இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவரின் கணவரான தாமோதரன் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனினும், தேர்தல் பிரச்சினையால் அவர்களுக்குள் பகை அதிகமானது.
இந்நிலையில், 2020 ஜூலை 19-ம் தேதி சுபாஷ் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தாமோதரன், அவரது மகன் வில்பார், ராஜதுரை, கவியரசன், சுபகனேஷ், தமிழ்வாணன், மணிமாறன், தர்மராஜ், தினேஷ்குமார், பக்கிரிசாமி, மணிவண்ணன், வெங்கடாபதி ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மாவட்டமுதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது வெங்கடாபதி இறந்து விட்டார். பக்கிரிசாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற 10 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம்அபராதமும் விதித்து நீதிபதிசரஸ்வதி நேற்று தீர்ப்பளித்தார். தொடர்ந்து, 10 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.