

திருச்சி: திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 8.20 மணி அளவில் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பீமநகர் காவலர் குடியிருப்பு முன்பு வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உயிர் பிழைக்க காவலர் குடியிருப்பில் வசிக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் வீட்டிற்குள் தாமரைச் செல்வன் புகுந்தார். அப்போதும் பின்வாங்காத கொலைவெறி கும்பல் தாமரைச் செல்வனை வெட்டிக் கொலை செய்தது.
சுதாரித்துக் கொண்ட காவலர் குடியிருப்பு போலீஸார் கொலையாளிகளை துரத்தினர். அதில், திருவானைக்காவலைச் சேர்ந்த இளமாறன் மட்டும் சிக்க, பாலக்கரை போலீஸார் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி லால்குடி அருகே எசனைக்கோரையை சேர்ந்த சதீஸ்குமார், ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரை பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் தலைமையிலான தனிப்படையினர் ஆளவந்தார் நீரேற்று நிலையம் அருகில் நேற்றிரவு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதரில் பதுங்கியிருந்த சதீஸ்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் காவலர்கள் ஜார்ஜ் வில்லியம், மாதவராஜ் ஆகியோரின் கைகளில் வெட்டினர். படுகாயமடைந்த காவலர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர் திருவானாந்தம், போலீஸாரின் பாதுகாப்புக்காக சதீஸ்குமார் வலதுகால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டார். சதீஸ்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த காவலர்கள் இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த ஆணையர் காமினி, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படுகாயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதையடுத்து மற்றொரு தனிப்படையினர் மீதமுள்ள 3 பேரை தேடியபோது, அவர்கள் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள ரயில்வே பாலத்தின் கீழே பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் பிடிக்க முயன்றபோது பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் திருவானைக்காவலை சேர்ந்த நந்தகுமாரின் வலது கை முறிந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பிரபாகரன், கணேஷ் ஆகியோருக்கு வலது கால்களில் முறிவு ஏற்பட்டது. அதையடுத்து அவர்களை மீட்ட போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே பிடிபட்ட இளமாறன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி மாநகர போலீஸார் விடிய விடிய நடத்திய ரவுடிகள் வேட்டை, திருச்சி மாவட்ட ரவுடிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.