

போலி ஆவணங்கள் மூலம், வங்கியில் ரூ.7 கோடி கடன் பெற்று மோசடி செய்த 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர்கள் சேதுமாதவன் (45) மற்றும் வினிதா ராஜ்புட் (41) ஆகியோர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘தங்களது வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இரண்டு பெண்கள், ரூ.7 கோடி வீட்டுக் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வங்கிக்கு ரூ.7.10 கோடி இழப்பீடு ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பூரை சேர்ந்த சரஸ்வதி (46), வியாசர்பாடியை சேர்ந்த ஜெமிலா பேகம் (49) ஆகியோர் கூட்டு சேர்ந்து வீட்டு கடன் பெறுவதற்கு, போலியான ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். பின்னர், அதனை வங்கியில் சமர்ப்பித்து ரூ.7 கோடி கடன் பெற்றுள்ளனர். கடனாக பெற்ற பணத்தை இருவரும் தங்களுக்குள் பிரித்து எடுத்து கொண்டு மோசடி செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.