

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,500-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறை டிஐஜி (பொ) பழனி மற்றும் சிறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைதிகளிடம் குறைகளைக் கேட்டனர்.
அப்போது, 14-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள், தங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக 12-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் குற்றம்சாட்டினர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சிவசுப்பு(25), ராமநாதபுரம் மாவட்டம் மரவட்டி வலசையை சேர்ந்த தேவதாசன்(33) ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி விவேக் அளித்த புகாரின்பேரில், அரியலூர் மாவட்டம் செல்தான்காட்டை சேர்ந்த தனுஷ்குமார் (19), மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரை சேர்ந்த சந்திரமவுலி (26), மகாவிஷ்ணு (28), சந்திரமோகன் (30), நாகராஜ் (32), செம்பனார்கோவில் சதீஷ் (28), சிவகங்கை மாவட்டம் டி.புத்தூர் ராஜபாண்டி (20), திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சுரேஷ் (27), தூத்துக்குடி மோகன்குமார் (20) மற்றும் காயமடைந்த 2 பேர் என இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.