சென்னை | மாநகராட்சி குப்பை லாரி மோதிய விபத்தில் 8 வயது மாணவி உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தண்டையார்பேட்டையில் குப்பை லாரி மோதிய விபத்தில் 8 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். சென்னை தண்டையார்பேட்டை, கைலாசம் நகர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சரளா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். 8 வயது மகள் காவியா தண்டையார்பேட்டை, சோலையப்பன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில், 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு தாமதமாகச் சென்றதால் ஆசிரியர்கள், சிறுமியை வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, நேற்று மதியம் சிறுமி காவியாவை, வெங்கடேசனின் உறவினரான 17 வயது சிறுமி ஒருவர் இருசக்்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த வாகனத்தின் முன்புறம் சிலிண்டரையும், பின்புறத்தில் சிறுமியையும் வைத்து சென்றுள்ளார். தண்டையார்பேட்டை, புறநகர் மருத்துவமனை அருகே சென்றபோது நிலைதடுமாறி சிலிண்டருடன் 17 வயது சிறுமி ஒருபுறம் விழுந்த நிலையில், காவியா மறுபுறம் விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரியின் பின் சக்கரம், சிறுமி காவியாவின் தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், குப்பை லாரி ஓட்டுநரை பிடித்து, தாக்கி, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, குப்பை லாரி ஓட்டுநரான கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ் (35) என்பவரை கைது செய்தனர். விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரியின் கண்ணாடியை பொதுமக்கள் ஆத்திரத்தில் உடைத்து சேதப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in