

சென்னை: சென்னையில் உள்ள 20 வெளிநாட்டு துணை தூதரகங்களுக்கும் நடிகர் அருண் விஜய் வீட்டுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், தூதரகங்கள் உட்பட பலவற்றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஜிபி அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அதில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை, கிண்டியில் உள்ள பிலிப்பைன்ஸ்,ராயப்பேட்டையில் உள்ள ஆஸ்திரேலியா, நந்தனத்தில் உள்ள தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 20 துணைத் தூதரகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து, போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளான இடங்களில் சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பிறகு சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே வதந்தியை கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.