

சேலம்: சங்ககிரி அருகே 2 மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள இடங்கணசாலை தூதனூர் பகுதியில் கடந்த 4-ம் தேதி கல்குவாரி குட்டை நீரில் 2 மூதாட்டிகள் இறந்து கிடந்தனர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பாவாயி (70) மற்றும் பெரியம்மாள் (75) என்பது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி அய்யனார் (55) பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக மூதாட்டிகளை கொன்று, அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு, இருவரது சடலத்தையும் கல்குவாரி குட்டையில் வீசியது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அய்யனார், ஒருக்காமலை பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமைக் காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் நேற்று அய்யனாரை சுற்றி வளைத்தனர்.
அப்போது, அய்யனார் கத்தியால் உதவி ஆய்வாளர் கண்ணனை குத்திவிட்டு தப்ப முயன்றபோது போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அய்யனாரின் வலது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அய்யனாரை கைது செய்த போலீஸார், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அய்யனார் வெட்டியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் கண்ணன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சேலம் எஸ்.பி. (பொ) விமலா மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.