

ஓசூர்: தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான பெண்ணின் ஆண் நண்பர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்ற பெண் தொழிலாளி ரகசியகேமரா பொருத்தியது தெரியவந்தது. பின்னர் நீலுகுமாரியை போலீஸார் கைது செய்தனர். அவரது ஆண் நண்பரான, பெங்களூருவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த ரவி பிரதாப்சிங் என்பவர் கேமராவைப் பொருத்தச் சொன்னது தெரியவந்தது.
இதற்கிடையில், ரவிபிரதாப் சிங் ஜார்க்கண்ட மாநிலத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, உத்தனப்பள்ளி போலீஸார் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் சென்றபோது, ரவிபிரதாப் சிங் டெல்லிக்கு தப்பியோடியது தெரிந்தது. நேற்று காலை டெல்லி சென்ற போலீஸார், ரவிபிரதாப் சிங்கை கைது செய்து, விமானம் மூலம் உத்தனப்பள்ளிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் டெல்லி, பெங்களூருவில் இருந்து வந்த 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர், விடுதி அறைகளில் 2-வது நாளாக ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக என்று ஆய்வு செய்தனர். மேலும், 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் நேற்று போராட்டத்தைக் கைவிட்டனர். அதேநேரத்தில், விடுதியில் தங்கியிருந்த பெண்களில் பலரை, அவர்களது பெற்றோர் வந்து, வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.