

ஓசூர்: கெலமங்கலம் அருகே தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான வடமாநிலப் பெண், தவறான தகவலைக் கொடுத்து தனது ஆண் நண்பரை தப்ப வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவானவரை தேடி போலீஸார் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் விடுதி உள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா(22) என்ற பெண் தொழிலாளி ரகசிய கேமரா பொருத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக விடுதி காப்பாளரிடம் சக பெண் தொழிலாளர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் கேமரா அகற்றப்பட்டு, தொழிற்சாலை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் நீலுகுமாரி குப்தாவைக் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த அவரது ஆண் நண்பர் சந்தோஷ் என்பவரையும் கைது செய்தனர்.
இதனிடையே, சந்தோஷிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீலுகுமாரி குப்தாவிடம் மீண்டும் நடத்திய விசாரணையில், ரகசிய கேமராவை பொருத்தச் சொன்னது பெங்களூருவில் ஓட்டுநராக பணிபுரியும் இன்னொரு ஆண் நண்பரான ஒடிசாவைச் சேர்ந்த ரவி பிரதாப்சிங் என்பதும், அவரை தப்ப வைக்க போலீஸாரிடம் தவறான தகவலை நீலுகுமாரி குப்தா தெரிவித்ததும், ரவி பிரதாப்சிங் ஜார்கண்ட் மாநிலத்துக்கு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, உத்தனப்பள்ளி போலீஸார் 5 பேர் நேற்று காலை பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் ஜார்கண்ட் விரைந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று நண்பகலில் விடுதி வளாகத்தில் திரண்ட பெண் தொழிலாளர்கள், இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மற்றும் தனியார் தொழிற்சாலை உயர் அதிகாரிகள் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இப்பிரச்சினையால் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் பலர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். நேற்று 80 சதவீதம் பெண்கள் பணியை புறக்கணித்து விடுதியில் இருந்தனர். தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து வந்த 10 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விடுதி அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
தனியார் நிறுவனம் விளக்கம்
இதற்கிடையே, தனியார் தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எங்கள் விடுதி வளாகத்தில் எங்களுடைய ஊழியர்களில் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து, காவல்துறையில் புகார் அளித்தோம். இப் பிரச்சினையை நாங்கள் மிகவும் தீவிரமாகவும் மிகுந்த அக்கறையுடனும் அணுகி வருகிறோம். எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆதரவான சூழலைக் கொண்டிருக்கும் பணியிடத்தை உறுதி செய்யும் எங்கள் முயற்சியில் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவு நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதற்கான திட்டங்களைஉறுதியுடன் செயல்படுத்து வோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.