கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை

சம்பவம் நடந்த இடம்.
சம்பவம் நடந்த இடம்.
Updated on
1 min read

கோவை: கோவை பீளமேடு அருகே நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார், இவரும் அந்த மாணவியும் நண்பர்கள்.

இந்நிலையில், அந்த இளைஞரும் மாணவியும் நேற்று (நவ.2) இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு மூன்று இளைஞர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியால் கார் கண்ணாடியை உடைத்தனர்.

தொடர்ந்து, கண்ணாடி வழியாக கதவைத் திறந்து, காருக்குள் இருந்த இளைஞரை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார் . தொடர்ந்து அந்த மாணவியை வலுக்கட்டாயமாக மூன்று பேர் கும்பல் வெளியே இழுத்தனர். கார் அருகே உள்ள ஒரு புதர்ச் செடி அருகே அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று மூவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இன்று (நவ.3) அதிகாலை சுயநினைவு திரும்பிய அந்த இளைஞர் உடனடியாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பீளமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். போலீஸாரும் அந்த இளைஞரும் அந்த இளம்பெண்ணை தேடினர் .அப்பொழுது அருகே உள்ள புதர்ச் செடி அருகே உடலில் ஆடைகள் இன்றி இருந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், துணை ஆணையர் தேவநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கொண்ட கும்பலை பிடிக்க துணை ஆணையர் தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதனை தொடர்ந்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in