

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 4 வயது பெண் குழந்தை. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி வீட்டருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நயப்பாக்கம் பகுதியை சேர்ந்த தானேஷ் என்கிற யுவராஜ் (29), குழந்தையை அருகிலிருந்த உறவினர் வீட்டு மாடிக்கு தூக்கிச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக, குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,தானேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், தானேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி இன்று அளித்தார். அதில், தானேஷுக்கு 4 சட்டப்பிரிவுகளின் கீழ், 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.