

சென்னை: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் கணவருடன் சென்னை மதுரவாயலில் வசிக்கிறார். கடந்த 26-ம் தேதி இவரது வீட்டுக்கு திரிபுராவைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் முக்கியமான பொருளை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் இதை கவனித்த இளம் பெண், ‘அந்த பொருளை உங்களது வீட்டுக்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என நண்பரிடம் கூறி வாடகை வாகன செயலி மூலம் பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணையில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்று பொருளை ஒப்படைத்தார்.
பின்னர் நள்ளிரவில் அதே வாடகை வாகன செயலியில் அறிமுகமான அதே இளைஞரின் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் வழக்கமான வழியில் செல்லாமல் வேறு வழியில் இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று கத்திமுனையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பாக அந்த பெண் வானகரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.