

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பஞ்சாப் மாநில வழக்கறிஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளில் ஒருவரான ஸ்காட் கே.ஷோனௌர் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 27-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘பஞ்சாப் மாநிலம் நங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் (32) என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல வேண்டி பி1/பி2 விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். மேலும், அவர் நேர்காணலின்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தது போல போலி ஆவணம் வைத்திருந்தார். அதோடு, அவர் வழங்கிய ஊதிய ரசீதும் போலியானது என தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிடப்பட்டது. அதன்படி, அப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர் கீதாஞ்சலி, உதவி ஆணையர் காயத்ரி மேற்பார்வையில் போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் ஹைதராபாத்தை சேர்ந்த பிரதீப்குமார் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஜித்தேந்தர் ஆகியோர் ரூ.30 ஆயிரம் பெற்றுக் கொண்டு வழக்கறிஞரான குல்தீப் குமாருக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, குல்தீப் குமார் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பிரதீப் குமார், ஜித்தேந்தர் ஆகிய இருவரையும் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.