

சென்னை: மத்திய அரசு அதிகாரி தனது மகனை கொலை செய்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி கழுத்து அறுபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன் (43).
இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்புக்கணக்குகள் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணி செய்து வந்தார். தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணி செய்யும் மனைவி நிவேதிதா (38), 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மகன் லவின் கண்ணன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் நிவேதிதாவின் படுக்கை அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே பக்கத்து அறையிலிருந்த நவீன் கண்ணனின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது மருமகள் நிவேதிதா கழுத்து அறுபட்டு ரத்தம் வடிந்த நிலையிலும், பேரன் லவின் கண்ணன் கழுத்து நெறிக்கப்பட்டு சடலமாகக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருமகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன் கண்ணனின் பெற்றோர், உதவிக்கு வந்த அக்கம் பக்கத்தினரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரட்டூர் - வில்லிவாக்கம் இடையே காலை 10.30 மணியளவில், பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் முன்பு பாய்ந்து நவீன் கண்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஏற்கெனவே பேரன் இறந்து, மருமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது, மகனும் இறந்த செய்தி கேட்டு நவீன் கண்ணன் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “நவீன் கண்ணனுக்கு ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் மகனை கொலை செய்துவிட்டு, மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். நிவேதிதாவிடம் விசாரித்தால் இது உண்மையா என தெரிந்துவிடும். அவர் தற்போது பேசும் நிலையில் இல்லை. முழு விசாரணைக்குப் பின்னரே இது உறுதி செய்யப்படும்” என்றனர்.