

சென்னை: கத்திமுனையில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவொற்றியூர், பட்டினத்தார் கோயில் தெருவில் வசித்து வருபவர் மேத்யூ (25). இவர் கடந்த 25-ம் தேதி திருவொற்றியூர், மாட்டு மந்தை மேம்பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், மேத்யூவை வழிமறித்து தாக்கியதோடு கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன், பணத்தை பறித்து தப்பினர்.
இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மேத்யூ புகாரளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேத்யூவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது திருவொற்றியூரைச் சேர்ந்த அகில் (31), இம்ரான் (26) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்துனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட அகில் மற்றும் இம்ரான் ஆகிய இருவரும் திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பதும், அகில் மீது ஏற்கெனவே 11 குற்ற வழக்குகளும், இம்ரான் மீது 9 குற்றவழக்குகளும் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.