

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுப் புளிக்காடு கிராமத்தில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(53) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளித் தலைமை ஆசிரியை நரியம்பாளையம் விஜயாவிடம்(55) புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்தப் புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் பாஸ்கர் 7 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியர் பாஸ்கர் மற்றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை விஜயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கிடையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுஉள்ளார்.