டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சென்னை முதியவரின் சேமிப்பு பணம் ரூ.44 லட்சம் அபகரிப்பு - 2 பேர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சென்னை முதியவரின் சேமிப்பு பணம் ரூ.44 லட்சம் அபகரிப்பு - 2 பேர் கைது
Updated on
1 min read

டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, முதியவரிடம் சேமிப்பு பணம் ரூ.44 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் வங்கி துணை மேலாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பட்டாபி (83). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த செப்.1-ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தனது பெயர் சங்கர், மும்பை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, ‘நீங்கள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு, வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளீர்கள். எனவே, உங்களை கைது செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது’ என்று கூறி, பட்டாபியை மிரட்டி உள்ளார்.

மேலும், ரிசர்வ் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு மிரட்டி, பட்டாபியின் வங்கிக் கணக்கில் இருந்து அவரது ஒட்டுமொத்த சேமிப்பு பணமான ரூ.44 லட்சத்தை அபகரித்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்: மீண்டும் பட்டாபியை தொடர்பு கொண்ட நபர், மேலும் பணத்தை கேட்டு மிரட்டியதால் சந்தேகமடைந்த பட்டாபி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். வங்கி பணப் பரிவர்த்தனை விவரங்களை சேகரித்து நடத்தப்பட்ட விசாரணையில், ராணிப்பேட்டையை சேர்ந்த லட்சுமணன் (38), சிவக்குமார் (41) உள்பட பலரது வங்கிக் கணக்குகளுக்கு பணம் பிரித்து வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அக்.10-ம் தேதி அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி பணத்தை பெறுவதற்கு ஏதுவாக பல்வேறு வங்கிக் கணக்குகளை உருவாக்க உதவிய சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கியின் துணை மேலாளர் தருமபுரியை சேர்ந்த ராமச்சந்திர மூர்த்தி (30) மற்றும் மோசடி பணத்தை மாற்றும் முகவராக செயல்பட்டு வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது முஸ்பிக் (20) ஆகிய இருவரையும் போலீஸார் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in