

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிக்கு, உரிய மருத்துவ வசதிகளை வழங்க சிறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தனுகா ரோசன் என்பவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனுகா ரோசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ இலங்கையைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கைதிகள் புழல் சிறையில் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சில கைதிகளிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து, தற்போது அனைவரும் தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் தங்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என்பதற்காக என்னை பழிவாங்கும் விதமாக, தனிமை சிறைக்கு மாற்றியுள்ளனர். மூச்சுத் திணறல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வரும் என்னிடம் இருந்த இன்ஹேலரையும் சிறைத் துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்று விட்டனர். இதனால், எனக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய் உபாதைகள் அதிகரித்து விட்டது. எனவே, தனிமை சிறையில் அடைக்காமல், உரிய மருத்துவ சிகிச்சை வழங்க புழல் சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி வாதிட்டார். புழல் சிறைத் துறை நிர்வாகம் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோகுலகிருஷ்ணன் ஆஜராகி, இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கோரினார்.
அதையடுத்து, மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுக்க சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக, சிறைத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.3-க்கு தள்ளி வைத்தனர்.