

மதுரை: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பாலத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்தது தொடர்பான வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்தது.
2011-ல் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்டபோது மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகேயுள்ள பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்து, அவரைக் கொல்ல முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில் முகமது ஹனீபா என்ற தென்காசி ஹனீபா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, தென்காசி ஹனீபாவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கிலிருந்து தென்காசி ஹனீபா விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு, தங்களது தீர்ப்பில், "இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் நம்பும் வகையில் உள்ளன. கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் உண்மையானவை என்று வெடிமருந்து ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, அவரை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. அவருக்குரிய தண்டனை விவரங்கள் வரும் 28-ம் தேதி தெரிவிக்கப்படும். அப்போது அவர் ஆஜராக வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.