

கோவை: கோவையில் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு காரில் திரும்பிய இளைஞர்கள் 5 பேர், சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியதில் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(22), வேலாயுதம் மகன் பிரபாகரன்(19), பூக்கொல்லையைச் சேர்ந்த நாடிமுத்து மகன் ஹரிஷ்(20), புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சபரி ஐயப்பன்(21), அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்காவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் அகத்தியன்(20) ஆகியோர் நண்பர்கள் ஆவர்.
இவர்களில் பிரகாஷ், ஹரிஷ், சபரி ஐயப்பன் ஆகியோர் கோவை பச்சாபாளையம் அருகே தங்கியிருந்து, செல்வபுரத்தில் உள்ள நான்கு சக்கர வாகன ப்பராமரிப்பு நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். அகத்தியன், பிரபாகரன் ஆகியோர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில், 5 பேரும் நேற்று முன்தினம் இரவு கோவை செல்வபுரம் பகுதியில்இருந்து காரில் பேரூர் பச்சாபாளையம் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். காரை பிரகாஷ் ஓட்டினார். காரை பிரகாஷ் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
சிறுவாணி பிரதான சாலையில் பேரூர் செட்டிபாளையம் அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில், பிரகாஷ், ஹரிஷ், சபரி ஐயப்பன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், அகத்தியன், பிரபாகரன் ஆகியோரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே அகத்தியன் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்ட பிரபாகரன், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். தொடர்ந்து, 5 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதிவேகமாக சென்றபோது.. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "நேற்று முன்தினம் ஹரிஷுக்கு பிறந்த நாள். இதையடுத்து நண்பர்கள் 5 பேரும் செல்வபுரத்தில் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்போது அனைவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு செல்வதற்காக காரில் அதிவேகமாக சென்றபோது, விபத்தில் நேரிட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.