

மும்பை: மேற்கு மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து ரூ.252 கோடி மதிப்புள்ள மெஃபெட்ரோன் போதைப் பொருள் மற்றும் மூலப் பொருட்களை மும்பை போலீஸார் கடந்த ஆண்டு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முகம்மது சலீம் முகம்மது சோகைல் ஷேக் என்பவரை துபாயில் மும்பை போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றி வளைத்தனர். அவரை நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெஃபெட்ரோன் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்த ஷேக் முயன்று வந்தார். அதை வினியோகிக்கும் வழிகளை ஆராய்ந்து வந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட மூன்றாவது குற்றவாளி இவர் ஆவார்” என்றார்.