

பொன்னேரி: சென்னை, திருவொற்றியூர் அருகே விம்கோ நகரில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து, பொன்னேரி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை, திருவொற்றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35).
இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது, சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், ராஜேஷ், அண்ணன் சுரேஷ் தலையில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்தார்.
இந்த கொலை தொடர்பாக எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பொன்னேரியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-4-ல் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.ஆர்.லாசர் வாதிட்டார். வழக்கு விசாரணை முடிவில், ராஜேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று முன் தினம் பொன்னேரி, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-4-ன் நீதிபதி சிவகுமார் தீர்ப்பு அளித்தார். அதில் ராஜேஷுக்கு, சுரேஷை கொலை செய்வதற்காக வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், சுரேஷை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ராஜேஷ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.