

சென்னை: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சாவை, போலீஸார் பறிமுதல் செய்தனர். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சென்னையை அடுத்த சோழவரம், காரனோடை டோல் பிளாசா அருகே சாதாரண உடையில் கண்காணித்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த அசோக் லேலண்ட் வகை பெரிய வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். ஆனால், வாகனத்தில் எந்த பொருட்களும் இல்லை. சந்தேகம் அடைந்த போலீஸார் மீண்டும் சோதித்தபோது, வாகனத்தின் இடையே பெட்டிகளில் 320 கிலோ கஞ்சா ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் இப்ராஹிம் (58), திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த மதன் பாபு (29) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவிலிருந்த தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னணி என்ன? - பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரின் பின்னணி, மற்றும் கூட்டாளிகள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.