

காஞ்சிபுரம்: மாங்காடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில், நண்பரை கொலை செய்த டி.வி. சீரியல் துணை இயக்குநருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. சென்னை அருகே உள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சீரியல் துணை இயக்குநர் மணிகண்டன். இவர், 2021 புத்தாண்டு தினத்தன்று, தனது நண்பர்களான ருத்ரன், ராம்குமார், உள்ளிட்டோருடன் வீட்டில் மதுஅருந்திகொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மணிகண்டனுக்கும், ருத்ரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. ருத்ரன் தாக்கியதில் காயமடைந்த மணிகண்டன், ஆத்திரத்தில் சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து, ருத்ரனின் மார்பில் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மோகனகுமாரி குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக 2 மாதங்கள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.