

கோவை: கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இளம்பெண் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் ஹசன். இவரது மகன் ஆரிப் (20). இவர், கோவை கடைவீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் பஷீர் மகன் ஷேக் உசேன் (20) ஓட்டுநர். இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆரிப் வேலை செய்து வரும் ஜவுளிக்கடையில், செல்வபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகள் சத்தியபிரியா (17) என்பவரும் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், காந்திபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலம் சமீபத்தில் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் பயணிக்க மூவரும் திட்டமிட்டனர். அதன்படி, நேற்று (அக்.12) இரவு பணிகள் முடிந்த பிறகு, ஒரு காரில் மூவரும் ஊரைச் சுற்ற கிளம்பினர். காரை ஷேக் உசேன் ஓட்டினார். ஆரிப்பும், சத்தியபிரியாவும் காரில் பயணித்தனர்.
இவர்கள், இன்று (அக்.13) அதிகாலை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் உப்பிலிபாளையம் பகுதியில் ஏறினர். மேம்பாலத்தின் தொடக்கம் முதலே, ஷேக் உசேன் காரை வேகமாக ஓட்டி வந்தார். இதனால் அந்த சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறுக்கு உள்ளாகினர். இந்நிலையில், 10.10 கிலோ மீட்டர் தூரம் அதிவேகமாக பயணித்த இவர்கள், கோல்டுவின்ஸ் அருகே மேம்பாலத்தில் இருந்து இறங்க வந்தனர்.
அதிவேகமாக வந்ததால் காரை ஷேக் உசேனால் நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து வேகமாக சென்ற கார், மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி 300 மீட்டர் தூரம் சென்று, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பு பகுதி லாரியின் பின்பக்கத்துக்குள் நுழைந்தது.
காரில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே காருக்குள் சிக்கி நசுங்கினர். இதைப் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பீளமேடு போலீஸார், கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு, லாரியின் பின்பக்கத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டது. காரில் இருந்த ஆரிப், ஷேக் உசேன், சத்தியபிரியா ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.