

புதுடெல்லி: அலிகர் தொழிலதிபர் அபிஷேக் குப்தா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பெண் துறவி பூஜா சகுன் பாண்டே கைதாகி உள்ளார். இந்த வழக்கில் அவரது கணவரும் துப்பாக்கியால் சுட்ட கொலையாளிகள் இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி.யின் அலிகரின் பெண் துறவி பூஜா சகுன் பாண்டே (50) எனும் அன்னபூர்ணா பாரதி. முனைவர் பட்டம் பெற்ற இவர் கல்லூரி உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.பிறகு பணியை விடுத்து துறவறம் பூண்டு ஆசிரமம் நடத்தி வந்தார். பூஜாவின் ஆன்மிகச் செயலைப் பாராட்டி, துறவிகளின் நிரஞ்சன் அகாடா, மகா மண்டலேஷ்வர் பட்டம் அளித்துள்ளது.
பிறகு இந்து மகா சபாவில் இணைந்து அதன் பொதுச் செயலாளராகவும் உள்ளார். அலிகரில் துறவி பூஜா நடத்திய ஆசிரமத்தின் நிர்வாகியும், நெருங்கிய சகாவுமாக இருந்தவர் அபிஷேக் குப்தா. தொழிலதிபரான இவர், இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இருவருக்கும் இடையிலான நெருக்கம் விரோதமாகி மோதலானது.
இச்சூழலில் அபிஷேக் கடந்த செப்டம்பர் 26 இல் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையைச் செய்த அலிகரின் பிரபல கிரிமினல்களான பைஸல் மற்றும் ஆசீப் மறுநாளே கைது செய்யப்பட்டனர்.இவர்களது விசாரணையில் ரூ.3 லட்சம் பேசி அபிஷேக்கை கொல்ல உத்தரவிட்டது தெரிந்தது. இதன் பின்னணியில் துறவி பூஜா மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே இருப்பதாக சிக்கியக் கொலையாளிகள் தெரிவித்திருந்தனர். இதனால், அசோக் பாண்டே கைதாக, துறவி பூஜா சகுன் பாண்டே தலைமறைவானர். பூஜாவைப் பற்றி துப்பு அளிப்பவருக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டு, பிறகு இது ரூ.50,000 என அலிகர் காவல் துறையால் உயர்த்தப்பட்டிருந்தது.
இதனிடையே, கொலைக்கு மறுநாள் முஸ்லிம் பெண்ணைப் போல் பர்தா அணிந்து தலைமறைவானார் பூஜா. காஜியாபாத்திற்கு வாடகைக் காரில் தப்பியவர், அங்கு தாஸ்னா தேவி கோயில் மடத்தின் தலைவர் எத்தி நரசிம்மாணந்திடம் உதவி கேட்டுச் சென்றுள்ளார். இதை அவர் மறுத்து விடவே, பல இடங்களுக்கு அரசு பொதுப் பேருந்துகளில் பல ஊர்களுக்கு தலைமறைவாக சுற்றத் துவங்கினார் பூஜா. இவரைப் பிடிக்க அலிகர் ஏஎஸ்பி மயங்க் பதக் தலைமையில் ஐந்து படைகள் அமைத்து தேடி வந்தன.
இறுதியாக ராஜஸ்தானின் ஜெய்பூரில் இருந்தவரை அலிகர் போலீஸார் கைது செய்தனர். கைதான துறவி பூஜா, போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார். தாம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் தம் வழக்கறிஞர் மூலமாகவே எதையும் சொல்வேன் என அடம் பிடித்துள்ளார்.
வேறு வழியின்றி அவர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அலிகரின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று திங்கள்கிழமை நீதிமன்றக் காவலில் எடுத்து அலிகர் போலீஸார் விசாரிக்க உள்ளனர். இதில், மேலும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசத் தந்தைக்கு அவமதிப்பு: கடந்த ஜனவரி 2019-ல் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரை அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் பூஜா. காந்தி உருவ பொம்மை செய்து அதை துப்பாக்கியால் சுட்டு எரித்திருந்தார். இந்த வழக்கில் கைதான பூஜா பாண்டே சிறையிலும் அடைக்கப்பட்டு ஜாமீனில் உள்ளார். இதனால், அவர் கோட்ஸேவைப் போற்றும் அகில இந்திய இந்துமகா சபாவினரால், ‘லேடி கோட்ஸே’ என்றழைக்கப்படுகிறார். இத்துடன் இந்து மகா சபாவினர் பூஜாவை தேசியப் பொதுச் செயலாளராகவும், அசோக்கிற்கு தேசியச்செய்தி தொடர்பாளர் பதவியும் அளித்திருந்தனர்.