

சென்னை: அபிராமபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணத்தை திருடிய நபரை போலீஸார் சிறையில் அடைத்தனர். சென்னை ஆர்.ஏ.புரம் வல்லீஸ்வரன் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ராஜா(40). பழைய பொருட்கள் வாங்கிவிற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராஜா வெளியே சென்றுவிட்டார்.
பின்னர், மாலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், கடந்த 7-ம் தேதி அதேபகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் (38) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 கிராம் தங்கம், ரூ.15,000 பணம் திருடப்பட்டதாக வந்த புகார் குறித்தும் அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இரண்டு வீட்டிலும் திருடியது ஒரே நபர்தான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், ஆர்.ஏ. புரத்தை சேர்ந்த சரவணன் (35) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.